Food Safety News – Tamilnadu updates – Feb -6-2017

தயாரிப்பு தேதி இல்லாத உணவு பாக்கெட்டுகள் விற்பனை தாராளம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதியில், பேட்ஜ் நம்பர், தயாரிப்பு தேதி குறித்த எந்த விபரமும் இல்லாத உணவு பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிப்படி, பாக்கெட் செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களின் விபர பட்டியல், அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, உணவு பொருள் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் முகவரி, பேட்ஜ் நம்பர் போன்றவைகள் அவசியம் இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கி கொடுக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் பொருட்களில், தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் கால அளவு குறிப்பிடுவதில்லை. இதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில நிறுவன மினரல் வாட்டர், கூல்டிரிங்ஸ் போன்றவைகளின் பாட்டில்களில், தயாரிப்பு தேதிகளை பிரின்ட் செய்யாமல் விட்டு விடுகின்றனர். குறிப்பாக, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் டீத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் பொடி உட்பட பல பாக்கெட்டு களில், தயாரிப்பு தேதி, பேட்ஜ் நம்பர் என எதுவும் இருப்பதில்லை. ஆனால், பேக்கிங் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதம் பயன்படுத்தலாம் என்ற வாசகம் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. இதனால் கடைகளில் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவில், இதேபோல், பேட்ஜ் நம்பர், தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்ட போதும், கிராம மற்றும் நகர்புற மக்கள் பெரும்பாலானோர், அதை பார்க்காமலேயே வாங்கி சென்று பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்க வேண்டிய, உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் இன்று வரை, பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் தேதி, பேட்ஜ் நம்பர் இல்லாத பேக்கிங் உணவு பொருள் விற்பனை தொடர்கிறது.

தைப்பூசத்தில் அன்னதானம் பதிவு செய்ய அறிவுறுத்தல்

வடலுார்: வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் அன்னதானம் வழங்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் வரும் 9ம் தேதி தை பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தருமச்சாலையில் உணவு தயாரிக்கும் இடம், உணவு பரிமாறும் இடங்களை குறிஞ்சிப்பாடி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன், நல்லதம்பி, கொளஞ்சியான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது தருமச்சாலையில் தைப்பூசத்தில் தரமான உணவு, சூடாகவும் வழங்கவும், விடுதிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அறிவுறுத்தினர்.அன்னதானம் வழங்குபவர்கள் பாக்குமட்டை தட்டு, வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பேப்பர் தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களில் செயற்கை வண்ணங்களை சேர்த்து தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். வெளி ஊர்களில் இருந்து வாகனங்களில் உணவு வழங்க வருபவர்கள் உணவு வழங்க ஓதுக்கிய இடத்தில் வைத்து வழங்கிவிட்டு கழிவு பொருட்களை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.விழா காலங்களில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி உணவுப் பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளிடம் அறிவுருத்தினர்.

Leave a comment