சகாக்களுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏடிஎம் வேனில் ரூ.2 கோடி கொள்ளை

மும்பை:

 

மும்பையில் சக ஊழியர்களுக்கு டீயில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு ஏடிஎம் எந்திரத்தில் நிரப்ப வைத்திருந்த ரூ.2 கோடி பணத்தை கொள்ளையடித்த பாதுகாப்பு ஏஜென்சி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சாத்ரே ஆலம். அவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு ஏஜென்சி மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வங்கியில் இருந்து ரூ.2 கோடி பணத்தை பல்வேறு ஏடிஎம் எந்திரங்களில் நிரப்ப ஆலம், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர், பணத்தை நிரப்புவர் ஒரு வேனில் லோயர் பரேலில் இருந்து கிளம்பியுள்ளனர். வாகனம் செல்கையில் ஒரு கடையில் டீ குடிக்கலாம் என்று ஆலம் கூறவே அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.

அப்போது ஆலம் டீ வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து வேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேருக்கு கொடுத்துள்ளார். டீ குடித்தவுடன் அவர்கள் வேனில் கிளம்பியுள்ளனர். வேன் டிரைவரை தவிர டீ குடித்த மற்ற 2 பேரும் மயங்கிவிட்டனர்.

இந்நிலையில் வேன் மிலன் சப்வே பாலம் அருகே செல்கையில் மாருதி ஜென் காரில் வந்தவர்கள் வேனை மறித்து டிரைவரை தாக்கினர். அதன் பிறகு ஆலம் வேனில் இருந்த ரூ.2 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு காரில் வந்தவர்களுடன் தப்பிவிட்டார். டிரைவர் அந்த காரை சிறிது தூரம் பின்தொடர்ந்தார். அது தனது கண்பார்வையில் இருந்து மறைந்த உடன் வேன் டிரைவர் நடந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பிறகு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலம் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கர்லா பகுதியில் உறவினருடன் வசித்து வந்துள்ளார். இந்த பாதுகாப்பு ஏஜென்சியில் சேர்ந்த பிறகு அவர் தனது வீட்டை மாற்றிவிட்டார். அவரின் தற்போதைய முகவரியை போலீசார் தேடி வருகிறார்கள். Topics:

tamil.oneindia.com

Leave a comment