குற்றம் நடந்தது என்ன? பிரபல உணவகங்களின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு தேவை ஒரு ஃபாலோ அப்!

கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நான்கு பிராஞ்சுகளுக்கு நேற்று FSSI நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அன்னபூர்ணாவில் மதியச் சாப்பாட்டுக்காக சென்றிருந்த மென்பொறியாளர் ஒருவர் ஆர்டர் செய்திருந்த தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி கிடந்ததால். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் FSSI( Food safety & standards authority) நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. இதைக் குறித்து ஹோட்டல் நிர்வாகம் இதுவரை விளக்கம் அளித்ததாகத் தெரியவில்லை. கோவை என்றாலே உணவகங்களைப் பொறுத்தவரை உலகப் பிரபலாமனவை அன்னபூர்ணா, கெளரி சங்கர் உணவகங்கள். பல ஆண்டுகளாக தங்களது உணவு வகைகளுக்காகப் பிரபலமாகப் பேசப் பட்ட உணவகம் ஒன்றில் இப்படி ஆனதைக் கண்டு கோவை வாசிகள் அதிருப்தியாக உணர்வதை முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவத்தை ஒட்டி அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிகிறது.
கோவை அன்னபூர்ணா உணவகம் மட்டும் தான் என்றில்லை, சென்னை சரவண பவன் உணவகங்கள், தலப்பா கட்டி உணவகங்கள், கே.எஃப்.சி, இப்படி பிரபலமான உணவகங்கள் திடீர், திடீர் என செய்தியாகி பின்னர் அந்தச் செய்தி வந்த சுவடே இன்றி மறைந்தும் விடுகின்றது. உணவகங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் சரி செய்யப் படுகின்றனவா? என்பதை பின் தொடர்ந்து அறிந்து கொள்ளும் வசதி உண்டா? அப்படி இருப்பின் மேற்கண்டவாறு புகாருக்கு உள்ளான அத்தனை உணவகங்களிலும் இதுவரை நடந்ததென்ன? அவர்கள் தங்கள் மேல் சுமத்தப் பட்ட குற்றத்தை அல்லது பிழையைச் சரி செய்த பின்பு தான் அவர்களுக்கு தொடர்ந்து தங்களது உணவகங்களை நடத்தும் உரிமை அளிக்கப் பட்டிருக்கிறதா? இதையெல்லாம் சாதாரண மக்கள் எப்படி அறிவது?
எந்த ஒரு பிரபல உணவகத்தின் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிலும் சரி இதுவரையில், பாதிக்கப் பட்டவர் உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் புகார் அனுப்புவதை நாம் நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். சில நாட்கள் அந்த உணவகங்களைப் பற்றி ஆதரவாகவோ, எதிராகவோ நமது கருத்துக்களைப் பதிகிறோம், பகிர்கிறோம். அவ்வளவு தான் அதற்கு மேல் அந்த புகார் விசயத்தில் என்ன நடந்தது? என்பதைப் பற்றி பெரும்பாலும் நமக்கு அக்கறை இருப்பதில்லை. மீண்டும் அதே மாதிரியான ஒரு புகார் முக்கியச் செய்தியாகும் போது மீண்டும் பால் பொங்குவது போல பொங்கி விட்டு பாலில் நீர் தெளித்தாற் போல மீண்டும் அடங்கி விடுகிறோம். இதற்கொரு முடிவு நிச்சயம் தேவை. ஏனெனில் இன்றைக்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கும் விசயங்களில் ஒன்று உணவுப் பழக்கத்தினால் வரக்கூடிய பல்வேறு விதமான நோய்கள். 
50 வயதுக்கு மேல் பலருக்கும் கேன்சர் வரக் காரணமான விசயங்களில் பிரதானமானது அவர்கள் மேற்கொள்ளும் உணவுப் பழக்கமும் தான் என மருத்துவ ஆய்வு முடிவுகள் பல திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உணவகங்கள் மீது முன்வைக்கப் படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டுகள், புகார்களில் அடுத்தடுத்து என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிய தெளிவு பொது மக்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.
பாதுகாப்பற்ற உணவகங்கள் என்று இன்று மூடப்படும் உணவகங்கள் நாளை மீண்டும் திறக்கப் படுகையில், அவற்றின் மீது வைக்கப் பட்ட குற்றம் களையப்பட்டது என்பதை நீதிமன்றங்களில் நிலைநாட்டினால் மட்டும் போதுமா? மக்கள் அதை கண் கூடாக உணர வேண்டியதில்லையா? புகாருக்கு உள்ளான உணவகங்கள் மறுபடி திறக்கப் படுகையில், செயல்படத் தொடங்குகையில் அவற்றில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறியவேண்டுமில்லையா? இதற்கு முன்பும், இதற்குப் பின்பும் அப்படி அறிந்தார்களா? அறிவார்களா? என்பது தான் நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி.
 
ஆகவே எப்போதெல்லாம் உணவகங்கள் குறித்து புகார்கள் எழுகின்றனவோ, அப்போதெல்லாம் அதைப் பற்றிய ஒரு தெளிவான ஃபாலோ அப் இருந்தால் நன்றாக இருக்கும். இதைச் செய்ய வேண்டியதும் மக்களே. புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பின் பின் விலையேற்றப்பட்டுள்ள உணவக உணவுப் பொருட்களுக்காக காசையும் கொட்டிக் கொடுத்து விட்டு கரப்பான் பூச்சிகள், ஈக்கள், புழுக்களையும் சேர்த்து உண்ண வேண்டுமென்றால் அது நியாயமில்லையே.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s