ஃபுட் பாய்சன் கர்ப்ப காலத்தில் அதிக கவனம்!

வேங்கடபதி, குடல் மற்றும் இரைப்பை மருத்துவர்

உணவே மருந்தாக இருந்தது ஒரு காலம். சைனீஸ், கான்டினென்டல், இத்தாலியன்  என விதவிதமான உணவகங்கள், விதவிதமான உணவுகள் சந்தைக்கு வந்த பிறகு நம் வாழ்வோடு சேர்ந்தும் வயிறும் குழம்பிப்போய் விட்டது.

வார இறுதி நாட்களிலும், சுற்றுலா செல்லும் நாட்களிலும்  கலர்கலரான உணவுகளை என்னவென்றே தெரியாமல் ஆசை ஆசையாக சாப்பிட்டுவிட்டு மறுநாள், விடுப்பு எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கும் பெட்ரூமுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டம் மெள்ள அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்த நவீன வாழ்க்கைமுறை தந்த இம்சைகளில் ஒன்று ‘ஃபுட் பாய்சன்’. இது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படித் தவிர்க்கலாம்?

ஃபுட் பாய்சன்

கலப்படம் நிறைந்த, உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்கள் கலந்த, கெட்டுப்போன உணவுகளை உண்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஃபுட் பாய்சன் என்கிறோம். பொதுவாக, பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, லேசான காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமோ சாதாரண ஃபுட் பாய்சனின் அறிகுறியாக வெளிப்படும்.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு, அதீத காய்ச்சல்,  பேசவோ பார்க்கவோ இயலாத அளவுக்கு சுயநினைவு இழத்தல், தீவிரமான நீர் இழப்பு, நாக்கு உலர்தல், சிறுநீர் வெளியேறாமை போன்றவை உயிரைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரமான ஃபுட் பாய்சன் பிரச்னை.

எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

பாக்டீரியா

பெரும்பாலான ஃபுட் பாய்சன் பிரச்னைகள் பாக்டீரியாத் தொற்று உள்ள உணவுகளை உண்பதாலேயே ஏற்படுகின்றன.

இ-கோலி  (E. coli), லிஸ்டீரியா (Listeria) சால்மனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியாத் தொற்றே இதில் பெரும் பங்குவகிக்கின்றன. காம்பைலோபாக்டர்  (Campylobacter) சி.பொட்டுலினம் (C.botulinum) போன்ற பாக்டீரியாக்களும் ஃபுட் பாய்சனை உருவாக்குகின்றன.

ஒட்டுண்ணிகள்

பாக்டீரியாத் தொற்றால் ஏற்படும் ஃபுட் பாய்சனோடு ஒப்பிடும்போது, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஃபுட் பாய்சன் என்பது குறைவே. ஆனால், உணவின் மூலம் பரவும் ஒட்டுண்ணிகள் மிகவும் ஆபத்தானவை.

டாக்ஸோபிளாஸ்மா (Toxoplasma) என்ற ஒட்டுண்ணிகள் இதில் குறிப்பிடத்தக்கவை.

ஒட்டுண்ணிகள் நமது செரிமானப் பாதையில் வசிப்பவை. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதும், கர்ப்பக் காலத்திலும் இவை குடலை பாதிக்கின்றன.

வைரஸ்

நோராவைரஸ் (Norovirus) எனப்படும் நுண்ணுயிரியால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அரிதாகச்  சிலருக்கு இதனால் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

ரோட்டா வைரஸும், ஆஸ்ட்ரோ வைரஸும் வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் மூலமாகவும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

தொற்று எப்படி ஏற்படுகிறது?

பாத்தோஜென்ஸ் (pathogens) எனப்படும் நுண்ணுயிர்கள் பொதுவாக அனைத்து உணவிலும் காணப்படும்.

சமைக்கும்போதும், சூடுபடுத்தும்போதும் பெரும்பாலும் இவை அழிக்கப் பட்டுவிடுகின்றன.

பச்சையாக சாப்பிடும் உணவுகள், பாத்தோஜென்ஸ் தொற்றுக்கு வழிவகுக்கின்றன.

சமைக்கும்போது, கைகளைச் சுத்தம் செய்யாமல் சமைப்பதாலும் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.

தண்ணீர், அசைவம், முட்டை மற்றும் பால் பொருள்கள் விரைவில் கெட்டுப்போகக்கூடியவை. எனவே, இவற்றின் மூலம் ஃபுட் பாய்சன் எளிதாக ஏற்படலாம்.

யாருக்கு பாதிப்பு அதிகம்?

பொதுவாக, ஃபுட் பாய்சன் என்பது அனைவருக்குமே ஏற்படக்கூடியதுதான். ஆனால், ஆட்டோ இம்யூன் பிரச்னை எனப்படும்  நோய் எதிர்ப்புச் சக்தி பிரச்னை இருப்பவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும்போது பிரச்னை தீவிரமடைகிறது.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும்போதும் பாதிப்புகள் மோசமாக இருக்கும்.

பரிசோதனைகள்

ரத்தப் பரிசோதனை, மலப் பரிசோதனையுடன் சில சமயங்களில் உண்ட உணவுப் பரிசோதனையும் செய்யப்படும்.

அப்போதுதான் எந்த மாதிரியான மூலப்பொருளால் நஞ்சு உருவானது என்று கண்டறிய முடியும்.

சிகிச்சைகள்

பொதுவாக, ஆரோக்கியமானவர்களுக்கு மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் தானாகவே குணமாகிவிடும்.

வயிற்றுப்போக்கு இருந்தால் உடலில் நீர் இழப்பு இருக்கும் என்பதால், அதற்கான சிகிச்சைகள் தரப்படும்.

அதாவது, டிரிப்ஸ் மற்றும் எலெக்ட்ரோலெட் கரைசல் மூலம் உடலுக்கு குளுக்கோஸ் தரப்படும்.

இது உடல் சோர்வில் இருந்து காக்கும். போதுமான அளவு ஓய்வு மிகவும் அவசியம்.

ஃபுட் பாய்சன் ஏற்பட்டவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?

ஃபுட் பாய்சனின்போது வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும் என்பதால் செரிமானத்துக்குக் கடினமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஜூஸ், கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற எளிதான உணவுகள் சிறந்தவை.

எவற்றைத் தவிர்க்கலாம்?

செரிமானத்துக்குச் சிரமமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பால் பொருள்கள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், காபி, டீ, வறுக்கப்பட்ட, பொரிக்கப்பட்ட உணவுகள், பரோட்டா போன்ற மைதா உணவுகள், அசைவம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

– இளங்கோ கிருஷ்ணன், பா.பிரியதர்ஷினி


ஃபுட் பாய்சன் தவிர்க்கும் வழிகள்

* காரமான, மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஹோட்டல் உணவுகள் எப்போது தயாரிக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரியாது என்பதால் இயன்றவரை அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* பயணங்களின்போது செரிமானத்துக்கு எளிதான உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும்.

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சாப்பிடுவதால் நமது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.

* சமைக்கும் முன்பு கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். அதுபோலவே, காய்கறிகள், பழங்கள், அசைவப் பொருள்களை நன்கு சுத்தம் செய்த பிறகே சமைக்க வேண்டும்.

* பச்சையான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* உணவுப்பொருள்களை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருள்களை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

* அசைவ உணவுகளை ஒருமுறை சமைத்ததுமே சாப்பிட்டுவிடுவது நல்லது.


நன்றி  :  http://www.vikatan.com

 
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s