நோய் பரப்பும் கேன் வாட்டர்… உஷார்! நல்ல குடிநீர் தேர்ந்தெடுப்பது எப்படி?

காற்றைக்கூட ஒருநாள் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும்’ என்று யாராவது சொன்னால் ‘இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு’ என்று கேட்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு… ‘தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலைமை வரும்’ என்று செய்திகள் வந்தபோது, நாம் இதேபோல் நம்பாமல்தான் இருந்தோம்.
ஆனால் இன்றைக்கு தண்ணீருக்காக நாம் படும் பாடு சொல்லிமாளாது. நமது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவு ஆறுகளில் நீர்வரத்து இல்லை. ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் அனைத்தும் மாசுபட்டு, நச்சுகள் கலந்து விட்டது. மழை பொய்த்துப்போனதாலும், மக்களின் தவறான நடவடிக்கைகளாலும் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. போதிய நீர் கிடைக்காமை, தரம் பற்றிய பயம் காரணமாக கேன் தண்ணீரையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் கேன் தண்ணீர் உண்மையிலேயே தரமானதா? 
சமீபத்தில் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவியுடன் `கான்சர்ட்’ என்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் விற்பனையாகும் பிரபலமான நிறுவனங்களின் கேன் தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வின் முடிவில், அந்த நிறுவனங்கள் செய்யும் பல்வேறுமுறைகேடுகள் பற்றிய அதிர்ச்சியான தகவல்களைத் தந்துள்ளது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்திய நுகர்வோர் சங்க இயக்குநர் சந்தானராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
 Related imageImage result for fssai logo on label
தண்ணீர் கேன்களில் ISI, FSSAI முத்திரைகள் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், BIS (Bureau of Indian Standards) என்ற தர நிர்ணய அமைப்பு வழங்கும் ஐ.எஸ்.ஐ (ISI) தரச்சான்றிதழ் முத்திரை இல்லாமல் யாரும் குடிதண்ணீர் விற்கக்கூடாது. ஆனால் பலர் இந்த முத்திரைகளை நிரந்தரமாகப் போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள்.
எனவே இதுவிஷயத்தில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல் ஐ.எஸ்.ஐ தரச்சான்று மட்டும் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறானது. இந்தியாவில் ஒவ்வொரு உணவுக்கும் தர நிர்ணயம் செய்யும் FSSAI (Food Safety and Standards Authority of India) அமைப்பு உள்ளது. அதன் அனுமதியும் தேவை. எனவே தண்ணீர் கேனில் இந்த இரண்டு முத்திரைகளும் கட்டாயம் இருக்க வேண்டும். இருக்கிறதா என்பதைப் பார்த்துதான் நாம் வாங்கவேண்டும். சமீபத்தில் BIS-ன் இணையதளத்தில் பார்த்தபோது, முறைகேடாக செயல்பட்ட குறிப்பிட்ட தண்ணீர் கேன் கம்பெனி ஒன்றின் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பறிக்கப்பட்டது தெரியவந்தது” என்கிற சந்தானராஜன் மேலும் பல முறைகேடுகள் பற்றி சொல்லி அதிர்ச்சியூட்டினார்.
Image result for ISI label for drinking water
“தண்ணீர் கேன் வழங்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம், பேட்ச் எண், CML (Central Marking License) என்ற லைசென்ஸ் எண் போன்ற தகவல்கள் தண்ணீர் கேனில் தெளிவாக அச்சிடப்பட வேண்டும். இதே தகவல்கள் கேனின் மூடியிலும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான தண்ணீர் கேன்களில் இந்தத் தகவல்கள் இருப்பதில்லை. சில நிறுவனங்கள் கேனின் மூடியில் அச்சிடுவதற்குப் பதிலாக ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றன. இது மிக மிகத் தவறானது. இதேபோல் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தியதும் அவற்றை நொறுக்கிவிட வேண்டும் என்று அச்சிடப்பட்டிருக்கும். இதை நம்மில் எத்தனைபேர் கவனித்திருக்கிறோம்? எத்தனை பேர் பாட்டில்களை உடைத்தெறிகிறோம்? 
Image result for packaged drinking water label design india
இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தண்ணீர் பாட்டில்களையும், தண்ணீர் கேன்களையும் தவறானமுறையில் மறுசுழற்சி செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் எந்த நீரை வேண்டுமானாலும் அடைத்து விற்றுவிட முடியும். தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும் இந்தச் சூழலில் உடல்நலம் பற்றிய விழிப்புஉணர்வு இல்லாத பொதுமக்களும் தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்” என ஆதங்கப்பட்டவர் தொடர்ந்து பேசினார்.
தண்ணீர் கேன்கள் வளையாமல் இருக்கவும், எளிதில் உடையாமல் இருக்கவும் பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் மறுசுழற்சி செய்யப்படும் கேன்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவது கிடையாது. அந்த கேன்களில் நீரை நிரப்புவதற்கு இயந்திரங்களும் கிடையாது. மனிதர்கள்தான் நிரப்புகிறார்கள். அப்போது, சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் நிரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவற்றையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை” என்ற அதிர்ச்சிக் குண்டை தூக்கிப்போட்ட சந்தானராஜனிடம், தண்ணீரில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும் குடிநீர் நிறுவனங்களுக்கு எதிராக நம்மால் என்ன செய்ய முடியும்? நல்ல குடிநீரைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? என்று கேட்டோம்.
“முதலில் நாம் வாங்கும் குடிநீருக்கான பில்லை கேட்டு வாங்க வேண்டும். இப்போது பெரும்பாலானோர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, BIS இணையதளத்துக்குச் சென்று நாம் வாங்கும் குடிநீர் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்று பார்க்க வேண்டும். ISI, FSSAI முத்திரைகள் இருக்கிறதா எனவும் பார்க்கவேண்டும். எவ்வளவோ விஷயத்துக்குத் தேவையே இல்லாமல் போனில் பேசும் நாம் குடிநீர் நிறுவனத்தின் கஸ்டமர் கேரை அழைத்துப் பேச வேண்டும். தரமில்லாதப் பொருட்களை மாற்றித்தரச் சொல்லலாம். குடிநீரை நாமே நீர் பகுப்பாய்வு அலுவலகங்களில் கொடுத்து ஆய்வு செய்யச் சொல்லலாம். தரம் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்யலாம். நாம் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம். அதனால் நல்ல குடிநீரைப் பெறுவது நம் உரிமை” என்று முடித்தார். 
மனிதனுக்குத் தேவையான உணவு, காற்று, குடிநீர் போன்ற எந்த தேவையையும் நாம் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக, அவற்றைப் பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். வீட்டுக்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது நம் தமிழர் மரபு. ஆனால், இன்றைக்கு அந்தத் தண்ணீரே தரமில்லாததாக இருந்தால் என்ன செய்வது? தண்ணீர்… நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் நோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. மேலும், நாம் வாங்கும் கேன் தண்ணீர் தரமானதுதானா? என்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான குறைந்தபட்ச முயற்சியையாவது எடுக்கவேண்டும். இல்லையேல் நாம் குடிக்கும் நீர் நம் உயிருக்கு உலை வைக்கும்.
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s