Food Safety News – Tamilnadu updates – Jan 23-2017

நூதன முறையில் மக்களை ஏமாற்றி நாட்டுக்கோழி முட்டை என சாயம் பூசப்பட்ட முட்டைகள் விற்பனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு : சாயம் பூசப்பட்ட முட்டைகள் நாட்டுக்கோழி முட்டைகள் என்று ஏமாற்றி விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு வகைகளில் முட்டைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அசைவ பிரியர்கள் மட்டுமல்லாமல் சைவ உணவு சாப்பிடுபவர்களில் சிலரும் தற்போது முட்டைகளை விரும்பி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த முட்டைகளை சாப்பிடுவதால் புரதசத்து உட்பட பல்வேறு வைட்டமின் சத்துகள் கிடைப்பதால் அனைத்து வயதுடையவர்களும் இதனை விரும்பி உண்ணுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்திற்கு 2 நாட்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வாரத்தில் 5 வேளை நாட்களிலும் சத்துணவு வழங்கும் போது உடன் முட்டையும் வழங்கப்படுகிறது.
முந்தைய காலக்கட்டத்தில் நாட்டுக் கோழிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நாட்டுக் கோழிகளின் முட்டைகள் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் இதில் அதிகளவு சத்து இருக்கும். நாளடைவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி முட்டைகள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கல்லிலும், ஆந்திராவில் சித்தூரிலும் இருந்து அதிகளவு வெள்ளைக்கோழி முட்டைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தரத்தை பொறுத்து ஒரு முட்டை ₹3.45, ₹4, ₹4.25, ₹4.50 என பல விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் நாட்டுக்கோழி முட்டைகளோ குறைந்த அளவு உற்பத்தி மற்றும் அதிக சத்து நிறைந்தது என்பதால் இதன் விலை ₹5ல் இருந்து ₹10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அதிக லாபத்திற்காக அளவு சிறியதாக உள்ள வெள்ளைக்கோழி முட்டைகளை வாங்கிச் சென்று டிகாஷன் எடுத்த பிறகு வீசியெறியும் டீ கழிவுத்தூளை வாங்கி அதில் முக்கியெடுத்து நிறம் மாற்றி நாட்டுக்ேகாழி முட்டை என்றுகூறி நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.
அதனை வாங்கிச் செல்லும் பொதுமக்கள் வீட்டிற்கு சென்று சமைக்கும்போது அது நாட்டுக்கோழி முட்டை அல்ல என்று தெரிய வருகிறது. இப்படி வெள்ளைக்கோழி முட்டையை சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நபர்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்த கோழிகளை காசாக்கும் கும்பல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா

திருப்பூர்;திருப்பூரில், பண்ணைகளில் இறந்த கோழிகளை வாங்கி, தெருவோர கடைகளில் சில்லி சிக்கன், பிரியாணி செய்து விற்பனை செய்யப்படுகிறது. ‘சுகாதார துறையினர் களம் இறங்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதியில், கறிக்கோழி பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இங்கு, லட்சக்கணக்கான கோழிகள், இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இட நெருக்கடி, காலநிலை மாறுபாடு, அதிக பனி, நோய் போன்ற காரணங்களால், பண்ணையில் தினசரி, நுாற்றுக்கணக்கான கோழிகள் இறப்பதுண்டு.இவ்வாறு இறக்கும் கோழிகளை, சிலர், குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.
ஒரு சில பண்ணையாளர்களும், இறந்த கோழியை அப்புறப்படுத்தி புதைக்க, தனியே சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், அவற்றை விற்று விடுகின்றனர்.இறந்த கோழிகளை, ரகசிய இடத்தில் வைத்து வெட்டி, ரோட்டோரம் உள்ள சில தள்ளுவண்டி கடை, டாஸ்மாக் பார்களில், சமைத்து விற்பனை செய்கின்றனர்.தள்ளுவண்டி கடைகளில் பிரியாணி, ‘சில்லி சிக்கன், லெக் பீஸ்’ என, பல வகை உணவுகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். குறைந்த விலையில் வாங்குவதால், ஒரு பிளேட், 30 முதல், 35 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டில், 1 கிலோ சிக்கன், 160 முதல், 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டலில் ஒரு பிளேட் பிரியாணி, குறைந்தபட்சம், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பிளாட்பார கடைகளில், 30 முதல், 35 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.இறந்த கோழியை வாங்கி பயன்படுத்துவதால், இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, கூறுகின்றனர். இறந்த கோழிகளின் இறைச்சியை உட்கொள்வதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது.இவற்றை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கண்டும் காணாமல் உள்ளனர்.
நடைபாதை கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகள் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து, தரமற்ற உணவுகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், இறக்கும் கோழிகளை பண்ணையாளர்களே குழி தோண்டி, சுண்ணாம்பு துாள், கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூற வேண்டும்.இறந்த கோழிகளை விற்கும் பண்ணையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களின் துாக்கத்தை கலைத்து, இனியாவது களத்தில் இறங்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

அதிகாரிகள் திடீர் ஆய்வு: அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சிக்கடைகள் அகற்றம்

நாகர்கோவில் நகரில் ரோட்டோர இறைச்சிக்கடைகள் சுகாதாரமற்ற முறையிலும், அனுமதியின்றியும் செயல்படுவதாக மாவட்ட கலெகடர் சஜ்ஜன்சிங் சவானுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில், நகர் நல அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, ஒழுகினசேரி, புத்தேரி மற்றும் டெரிக் சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்தது.
கொட்டி அழிப்பு
அப்போது ரோட்டோரத்தில் அனுமதியின்றியும், பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் சுகாதாரமற்ற முறையிலும், ரோட்டை ஆக்கிரமித்தும் செயல்பட்டு வந்த 16 இறைச்சிக்கடைகள் அகற்றப்பட்டன.
மேலும் அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 780 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பீச்ரோடு பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகள் அனைத்தும் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைப்படி செயல்பட வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத கடைகளை அகற்றும்படி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று (அதாவது நேற்று) நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் நடைபெறும்‘ என்றார்.

லஞ்சம் வாங்கினால் உடனே எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஓச்சேரியில் புதிய வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு முதலில் தொடங்கப்பட்டுள்ள சங்கம் ஓச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள வணிகர் சங்கம் தான். பல்வேறு சட்ட விதிகள் வணிகர்களை நெருக்கிக்கொண்டு இருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை ஒருவரால் கூட கடைபிடிக்க முடியாது. ஐந்து நட்சத்திர ஓட்டல் நடத்துபவர்கள் கூட கடைபிடிக்க முடியாத சட்டம் இது. தற்போது வரை இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர விடாமல் தொடர்ந்து போராடி வருகிறோம்.
அதிகாரிகள் உங்களிடம் லஞ்சம் வாங்கினால் உடனே எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முகத்திரையை கிழிப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s